
தேசத்திற்காகப் போரிடுவதாகட்டும், விளையாடுவது ஆகட்டும் இரண்டிலுமே செய்நன்றி எதிர்பார்க்க முடியாது என்பார் என் தந்தை. மக்களும் அரசாங்கமும் எளிதாக மறந்து விடுவார்கள். அல்லது கண்ணை மூடிக்கொண்டு கேலி செய்வார்கள். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் செளரவ் கங்குலி. கங்குலி குறித்து எழுதினால் உணர்ச்சி வசப்பட்டு விடுவேன் என்பதால் கங்குலியைப் பற்றி எழுதுவதைத் தவிர்த்து வந்தேன். இன்று ச.ந. கண்ணனின் இந்தப் பதிவு என்னை உசுப்பிவிட்டது.
கங்குலி இந்திய கிரிக்கெட்டின் நவீன முகம். இன்றைய இந்திய அணியின் வெற்றிகள் அவர் இட்ட பிச்சை. கிழட்டுப் பயலுகளை வைத்துக்கொண்டு தள்ளாடிக்கொண்டிருந்த இந்திய அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது முதல் அவர் மேற்கொண்ட சீரமைப்புப் பணிகள்தான் அவரது மோசமான முடிவுக்கு காரணமாகி விட்டது. நாளது தேதி வரை வீரர்கள் தேர்வில் கடைபிடிக்கப்பட்டு வந்த மாநிலவாரி பிரதிநிதித்துவத்தையும், அரசியல் தலையீட்டையும் ஒழித்துக்கட்டினார். அணித்தேர்வில் கேப்டனுக்கும் பயிற்சியாளருக்குமே அதிகப் பங்களிப்பு இருக்க முடியும் என்பதைத் தன் ஆளுமையால் உறுதி செய்தார். இன்றைய நட்சத்திரங்களான வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், மகேந்திரசிங் டோணி போன்ற இளம் தலைமுறை கிரிக்கெட்டர்களின் கிரிக்கெட் வாழ்க்கையைத் துவக்கி வைத்தவர் கங்குலி. ஒரு கிரிக்கெட்டருக்கு இருக்க வேண்டியது திறமைதானே தவிர அனுபவம் இல்லை என்பதை இந்த உலகிற்குப் புரிய வைத்தவர் அவர். நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தேசிய அணியில் இடம் பிடிக்கக் காரணமாய் இருந்தார். இந்திய அணிக்கு வழங்கப்பட்டு வந்த வள,வளா கொழ, கொழா பயிற்சியை மாற்ற வெளிநாட்டு பயிற்சியாளர் வேண்டும் என்று கோரிக்கை வைத்தவரும் கிரேக் சாப்பலுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவும் காரணமாய் இருந்தவரே கங்குலிதான்.
சச்சின் என்னதான் மேஸ்ட்ரோ என்ற போதும் தலைமைப் பதவியில் சோபிக்க முடியாதவர். பதவி வேண்டாம் என்று ஓடியவர். ஆனால், சோதா டீமை வைத்துக்கொண்டு பெரு வெற்றிகளைக் குவித்தவர் கங்குலி. இன்றளவும் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் அவர்தான். சர்ச்சைப் புயல்கள் அவரை வட்டமடித்த போதும் அணிக்கான முடிவுகளைத் தெளிவாக எடுத்தவர். ஒவ்வொரு வீழ்ச்சியின் போதும் பீனிக்ஸாய் புறப்பட்டு வந்து தன்னைத் தொடர்ந்து நிரூபித்துக்கொண்டிருந்தார்.
கங்குலி இறுதிக்காலங்களில் நடத்தப்பட்ட விதம் மிகுந்த கேவலத்திற்குரியது. அவர் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த போதும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அவரை மொத்த தேசமும் கேலி செய்து கொண்டிருந்தபோது கூட வாய் திறவாதவர் 'அடிக்கடி ஹேர்ஸ்டைலை மாற்றினால்தான் தேர்வுக்குழுவிற்குப் பிடிக்குமோ என்னவோ' என்று பேட்டியளித்தது ஒரு கிரிக்கெட்டர் வாழ்வின் மிகப்பெரிய சோகம்.
இன்றளவும் இந்தியாவின் இணையற்ற பேட்ஸ்மேன்கள் சச்சினும் செளரவும்தான். உலகின் தலை சிறந்த பத்து பேட்ஸ்மேன்களைப் பட்டியலிட்டால் கங்குலியின் இடம் தவிர்க்க முடியாததது. பத்தாயிரம் ரன்களைக் குவித்த ஒரு பேட்ஸ்மேனை இவ்வளவு கீழ்த்தரமாக நடத்த இந்தியர்களால் மட்டும்தான் முடியும். கங்குலி கிரிக்கெட் வாரியத்தின் பெருச்சாளித் தனத்தை எதிர்த்தற்காகவும், ஆண்மையோடும் ஆக்ரோசத்தோடும் தேசத்திற்காக விளையாடியதாலும் இன்றளவும் கேவலப்படுத்தப்பட்டு வருகிறார். அவரது ஓய்விற்குப் பின் அவரது சேவையைக் கவுரவிக்க ஒரு 'டீ பார்ட்டி' நடத்தக்கூட வாரியத்திற்கும் விருப்பமில்லை. அவரால் வாழ்வு பெற்றவர்களுக்கும் விருப்பம் இல்லை.
என் வாழ்நாளில் கங்குலியைப் போன்ற தன்னம்பிக்கையுடைய ஒரு மனிதனைக் கண்டதில்லை. அவர் இந்திய இளைஞர்களால் ஊன்றிப் படிக்க வேண்டிய ஆதர்சம். ஆனால், இளைஞர் குழாமோ ஊடகங்கள் ஏற்படுத்தும் தோற்ற மயக்கங்களின் வழி அவரை அணுகுகிறது. கங்குலி குறித்த புத்தகம் ஒன்றை எழுத வேண்டும் என்பதுதான் என் நெடுநாள் ஆவல். கங்குலியின் ஓய்விற்குப் பின் ஏற்பட்ட அயற்சியில் அப்பணி கொஞ்சம் முடங்கி விட்டது. உசுப்பிவிட்ட கண்ணனுக்கு நன்றி!



