சம்பவம் - 1எலெக்ட்ரானிக் சாதனங்களை விற்கும் கடையொன்றில் நண்பர் 'கே'யை தற்செயலாகப் பார்த்தேன். அதி நவீன ஐ-பாட் ஒன்றினை வாங்கிக் கொண்டிருந்தார். 'இதுதான் இப்ப இருக்கிறதிலே ரொம்ப லேட்டஸ்ட்' என்றார்.
'ஏற்கனவே ஒண்ணு வெச்சிருந்தீங்களே?!'
'அத என் வொய்புக்கு கொடுத்திட்டேன்.'
'ஓஹோ'சம்பவம் - 2அலுவலக வேலைக்காக ரிஜிஸ்டர் அலுவலகம் சென்றிருந்தேன். நண்பர் 'எக்ஸ்' பரபரப்பாக அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்தார்.
'சார்... இங்க என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க?'
'ஒரு ரிஜிஸ்ட்ரேஷனுக்கு வந்தேன்.'
'எதாவது பிராபர்டியை விக்கப் போறீங்களா?' மெல்லிய தயக்கத்துடன் கேட்டேன்.
'ச்சே..ச்சே இல்லீங்க...கருமத்தம்பட்டில 'சுஸிலான்' பக்கத்துல ஒரு ஆறு செண்ட் காலிமனை சல்லிசா வந்திச்சி... அதான் முடிச்சிரலாம்னு...'
'ஏற்கனவே அந்த பக்கம் கொஞ்சம் இடம் வாங்கி இருந்தீங்களே?!'
'ஆமாமா... அதுவும் இருக்கு... இதுவும் இருக்கட்டுமேனு... வாங்கிப் போடுறேன்.'
'ஓஹோ'சம்பவம் - 3'எ' ஒரு கல்லூரி மாணவன். குடிகார தந்தை குடும்பத்தைக் கவனிக்காத காரணத்தினால் பகுதி நேர வேலைகளைச் செய்து கொண்டு படிப்பைத் தொடர்பவன். எங்கள் நிறுவனத்தில் தினமும் காலை எழு மணி முதல் ஒன்பது மணி வரை செய்கிற பகுதி நேர பணியொன்றிற்கு வந்து கொண்டிருக்கிறான். அன்றைக்கு வழக்கத்திற்கு மாறாக மாலைகள் அணிந்து, சந்தனம் தெளிக்கப்பட்ட புத்தம்புது பல்சரில் வந்து இறங்கினான்.
'என்னடே வண்டி புதுசா இருக்கு...?!'
'ஆமா சார் நேத்திக்குதான் எடுத்தேன்'
'அப்படியா... அப்பா வாங்கி கொடுத்தாரா...?!'
'இல்ல சார். நானே வாங்கிட்டேன். இன்ஸ்டால்மெண்ட்ல.'
'டெளன் பேமண்ட்?!'
'பதினெட்டாயிரம் கொடுத்தேன் சார்'
'ஓஹோ'நண்பர்களே,
சம்பவம் ஒன்றில் காணப்பட்ட நபர் 2004ஆம் ஆண்டில் தன் மனைவியின் பிரசவ வகைக்காக என்னிடத்தில் அவசர கடனாக ரூ.10,000/- வாங்கினார். தற்போது அவரது குழந்தை நகரின் உயர்தர பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருக்கிறது. என் பணம்...?! நாளது தேதி வரை
'ஓஹோ'சம்பவம் இரண்டில் காணப்பட்ட அன்பர் இதற்கு முந்தைய சொத்தினை வாங்க கொஞ்சம் பணம் குறைந்த போது மூன்று நாள் தவணையில் திருப்பித் தருவதாக ரூ.20,000/- வாங்கினார். சொத்து வாங்கி ஆறு மாதங்கள் கழித்து ஐந்தாயிரமும், அதற்கடுத்த மாதங்களில் இரண்டு முறை தலா ஆயிரமுமாக மொத்தம் ரூ.7,000/- திரும்ப தந்திருக்கிறார். மீத பணம்...?!
'ஓஹோ'சம்பவம் மூன்றில் காணப்பட்ட இளைஞர் தனது ஹாஸ்டல் பீஸை பல மாதங்களாகியும் கட்டாததால் கிழிந்த பாயும், அழுக்கு ஜீன்ஸூகளோடும் வெளியேற்றப்பட்ட நாளொன்றில் என்னைச் சந்தித்தார். அவருக்கு ஒரு வேலையும், தங்க இடமும், பல்சர் வாங்குவதற்கு முந்திய தினம் வரை தலா ஒரு வேளை உணவும், அவ்வப்போது கல்விச் செலவுக்கான பணமும் அடியேனின் நித்தியப்படி. இதைத் தவிர்த்து புரொஜக்ட் செய்ய படிப்பு முடித்த பின்னர்தான் தரமுடியும் என்ற முன்னறிவிப்போடு வாங்கிய கடன் ரூ.2,000/- பணம் வருமா?!
'ஓஹோ'அத்தியாவசிய தேவைக்கு மேல் இருக்கும் உபரி பணம், தேவை இருக்கிற ஒருவருக்கு பயன் படட்டுமே என்ற அபிப்ராயத்தில், நண்பர்கள் எப்போது கேட்டாலும் கடன் கொடுப்பதுண்டு. இந்த பைத்தியக்காரத்தனத்தினாலே சேமிப்புகளை இழந்தேன். என் வாழ்நாளில் ரமேஷ் வைத்யாவிடம் ஒரு முறை கடன் வாங்கியதே முதலும் கடைசியும். அவர் என் கூடப் பிறக்காத அண்ணன் என்றபோதும் ஒவ்வொரு இரவும் உறுத்தல் இருந்தது.
ஒரு மடிக்கணிணி வாங்க மூன்று வருடங்களாய் முக்குகிறேன். முடியவில்லை. திசையெட்டும் வங்கிகள் இருக்கிறது. நாளொன்றிற்கு கடன் வேண்டுமாயென நான்கு அழைப்புகளாவது வருகிறது. கேட்டால் கொடுத்து உதவ ட்அன்பான நண்பர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் கடன்பட வாழ்தலின் கசப்பினை நினைத்து தவிர்க்கிறேன். வாங்கிய கடன்கள் குறித்த உறுத்தல்கள் எதுவுமில்லாமல் பொருட்களை வாங்கிக் குவிக்கும் இவர்களைக் குறித்து கேண்டியிடம் புலம்பிக்கொண்டிருந்தேன்.
'நீ ஒரு கேனை' என்றாள்.
'ஓஹோ'